Pages

Share

Saturday 9 December 2017

தமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...-1

ரஜினிகாந்த்துக்கு வேதாளம் சொன்ன பதில்கள்... இப்படித்தான் தலைப்பு வைக்க எண்ணினேன். மக்களின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்ததால் அந்த எண்ணம் காணாமல் போய்விட்டது.

இந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது அவற்றில் சில வேதனையான சம்பவங்கள் மிகவும் மனதை பாதிக்கின்றன. இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வுகள் யார் கையில் இருக்கின்றது என யோசிக்கும்போது, மனிதர்கள் அனைவருமே சூழ்நிலைக் கைதிகளாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

திரைப்பட நடிகர்களின் ரசிகர்களாகட்டும், கட்சித்தலைவர்களின் தொண்டர்களாக இருக்கட்டும் தங்கள் அபிமான நடிகர் அல்லது தலைவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு குறைபாட்டை யாராவது சுட்டிக்காட்டினால், அவர் என்ன யோக்கியமா... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று பேசுவதுடன் எதிர்க்கருத்து கொண்டிருப்பவரை கடுமையாக தாக்குபவர்களும் உண்டு.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வெறித்தனமான அன்புடன் இருந்த ரசிகர்களில் இப்போதும் பெரும்பாலானோர் ரஜினி ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் வெறித்தனமான அன்பு என்பது இப்போது பக்குவப்பட்ட அன்பாக மாறியிருக்கலாம். திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் மற்றும் பிற விஷயங்களில் அவரது நடவடிக்கைகள் குறித்து இன்றைய மக்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். 

ஆனால் அவர் பெயரைக் கேட்டதும் உடலில் உள்ள ரோமக்கால்கள் சிலிர்க்கும் ரசிகர்கள் இன்றைக்கும் உண்டு. அவர் பெயருக்கு வணிக உலகில் மிகப்பெரிய பிராண்ட் மதிப்பும் உண்டு. அது ஊடகம் மற்றும் கார்ப்பரேட் திட்டமிடலால் உருவாக்கப்படுகிறது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. அதை முழுவதுமாக மறுப்பதற்கில்லை.

டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்ததினம் என்பதால் இந்த நேரத்தில் அவரது பெயரைப் பயன்படுத்தி பதிவு எழுதினால் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும் என்ற உத்தியை பின்பற்றுபவர்களில் நானும் விதிவிலக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
********
இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற முழுக்க முழுக்க கற்பனையான கதை.

தமிழ்செல்வன் கேட்ட கேள்விக்கு இரண்டே வார்த்தைகள்தான் பதிலாகச் சொன்னது அந்த வேதாளம். சொன்ன அடுத்த நொடி விருட்டென்று பறந்து சென்று மீண்டும் புளிய மரத்தில் தலைகீழாக தொங்கியது. அங்கே சென்ற தமிழ் மீண்டும் அந்த வேதாளத்தை வீழ்த்தி தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கியதும்,

‘நான்தான் சரியான பதிலை சொல்லிட்டேனே... அப்புறம் ஏன் என்னை மறுபடியும் புடிச்சுகிட்டு போறே?’

‘இத்தனை வருஷம் திரைப்படத்துறையில இருக்கேன்... இது எனக்கு தெரியாதா? எனக்கு மட்டுமில்லை... தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே, ஏன்... சின்ன குழந்தைகளுக்கு கூட என்னுடைய அந்த கேள்விக்கு நீ சொன்னதுதான் பதில்னு தெரியும். அதையே நீயும் சொல்லிட்டு மரத்துல தலைகீழா தொங்கிகிட்டே பொழுதைபோக்குறக்காகவா உன்னைய இவ்வளவு சிரமப்பட்டு பிடிச்சு இழுத்துட்டு போறேன்...

எனக்கு தேவை தெளிவான விளக்கம்... படிச்சவன்ல இருந்து படிக்காதவன் வரைக்கும், திரைப்படத்துறையில ஏதோ ஒரு வகையில பங்கெடுக்குறவங்கல்ல இருந்து படத்தை பார்க்குற ரசிகர்கள் வரைக்கும் எல்லாருக்கும் தெரிஞ்சுக்குற மாதிரி, புரிஞ்சுக்குற மாதிரி பதில் வேணும்.’ என்ற தமிழ்ச்செல்வனின் வேகம் சற்றும் குறையவில்லை.

‘மிஸ்டர் தமிழ்செல்வன்... ரொம்ப சாதாரணமா இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க... இதுக்கு விளக்கமா பதில் சொல்லணும்னா எவ்வளவு நாள் ஆகும்னு எனக்கே தெரியாதே... ஒண்ணா, ரெண்டா... ஓராயிரம் காரணங்கள் இருக்கு. ஆனா அது அத்தனையும் நான் சொன்ன ரெண்டே வார்த்தைகள்ல அடங்கிடும். அது எதுவுமே தெரியாத மாதிரி மரத்துல தொங்கிகிட்டிருந்த என்னைப் பிடிச்சு தூக்கிட்டுபோய் கேட்குறீங்கிளே... உங்களுக்கு இப்போ எதுவும் முக்கியமான வேலை இல்லையா?’



‘எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு... ஆனா இப்போ நான் உன்கிட்ட விளக்கம் கேட்குறது, மத்தவங்களுக்காக, திரைப்படத்துறைக்காக...’ என்ற தமிழ்செல்வன் அந்த வேதாளத்தை தோளில் போட்டுக்கொண்டு இன்னும் வேகமாக நடந்து கொண்டே இருந்தான்.

தமிழ்செல்வன் அந்த வேதாளத்திடம் கேட்ட கேள்வி என்ன? விக்கிரமாதித்தன் மாதிரி இவனும் வேதாளத்தை சுமந்து செல்லக் காரணம் என்ன?

---தொடரும்.

No comments:

Post a Comment