Pages

Share

Tuesday 17 October 2017

கிரிவலம் சென்றவர் மலையுச்சியில் இருந்து தவறி விழ என்ன காரணம்?

திருச்சி மாவட்டம், சஞ்சீவராயன் பெருமாள் கோவிலில் 2 அங்குலத்துக்கு குறைவாக விளிம்புகள் உள்ள சுவரில் கிரிவலம் வர முயன்ற நபர் தவறி விழுந்து மரணம் அடைந்ததற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? 
 dinamalar

தவறி விழுந்த நபருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா இல்லையா என்று நான் விவாதிக்கப்போவதில்லை.

ஆனால் அந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், குழந்தை இல்லை என்ற விஷயத்தால் இவ்வளவு ஆபத்தான நேர்த்திக்கடனை செலுத்த ஒரு நபர் துணிந்திருக்கிறார் என்றால் அந்த நபர் தன்னுடைய அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த சமுதாயத்தால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கக்கூடும்?
பழங்காலத்தைப் போல் குழந்தை இல்லை என்றால் பெண்ணை கொளுத்தி விடுவது, விவாகரத்து செய்துவிடுவது, இரண்டாவது திருமணம் செய்வது போன்று கொடுஞ்செயல்கள் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்றாலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மன உளைச்சலை தரும் வேலையை சமுதாயம் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.

நான் ஒண்ணும் தப்பா சொல்லலை... அவங்க நல்லதுக்குதானே சொல்றேன்னு சொல்லிகிட்டே கடுமையா காயப்படுத்துற உறவினர்கள் மட்டுமின்றி நண்பர்கள், அக்கம்பத்தினரும் இருக்காங்க.

சரி...குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இந்த சமுதாயத்தால் ஏற்படக்கூடிய மன உளைச்சலை எவ்வாறு சமாளிப்பது?

வசதி வாய்ப்புகள் இருக்குறவங்க உரிய மருத்துவ சிகிச்சைக்கு செலவழிக்கட்டும். பல லட்ச ரூபாய் செலவழிக்க உங்க பொருளாதாரம் இடம் தரலையா?... எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. உரிய சட்ட வழிமுறையை பயன்படுத்தி தத்து எடுத்துக்குங்க. உடல்நலக்கோளாறால குழந்தைப்பேறு அமையாத சூழ்நிலையில இப்படி தத்தெடுத்த பிறகு எத்தனையோ தம்பதிகள் சிறப்பு சிகிச்சை எதுவும் எடுக்காமலேயே அவங்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கு. அதுக்கு காரணம், பெத்த பிள்ளையோ, தத்துப்பிள்ளையோ, நம்மளை அம்மா, அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை இருக்குன்னுங்குற சந்தோஷத்துல அந்த தம்பதிகள் கவலை இல்லாம தாம்பத்தியத்துல ஈடுபட்டதுனால கூட அதன்பிறகு குழந்தைப்பிறப்பு சாத்தியமாகி இருக்கலாம்.

இன்னும் எதுவும் விசேஷம் இல்லையான்னு குழந்தை இல்லாத தம்பதிகளை கேட்டு அவங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குற வேலையை நாமும் செய்யாமல் இருப்பது நல்லது.

குழந்தைப்பேறுக்காக சிகிச்சை எடுத்துக்குறவங்களும், இவ்வளவு செலவழிக்கிறோமே... சிகிச்சை பலன் தருமா அப்படி இப்படின்னு மன சஞ்சலத்தை விட்டுட்டு, அந்த சிகிச்சைகளை சரியான மருத்துவமனைகள்ல உரிய மருத்துவர்களின் வழிகாட்டுதலோட எடுத்துக்குங்க.  பொதுவா மனித உடலுக்கு கேடு விளைவிக்கிற மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களையும், உணவு வகைகளையும் தவிர்த்துட்டு ஆரோக்கியம் தரக்கூடிய பால், தயிர், பழங்கள், கீரை உள்ளிட்ட எல்லாவகை உணவுகளையும் அதாவது சமச்சீர் உணவு வகைகள் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அதை சாப்பிட்டு வர்றதோட, நமக்கு குழந்தை பிறந்துடுச்சு... அடுத்த வருஷம் இந்த இடத்துக்கு அல்லது இந்த பண்டிகைக்கு நம்ம குழந்தையோட இந்த கோயிலுக்கு போறாம். இந்த ஊருக்கு சுற்றுலா போறோம் அப்படின்னு மன நம்பிக்கையோட இல்லற வாழ்க்கையை தொடருங்க. கண்டிப்பா நல்லது நடக்கும்.

அதை விடுத்து ஊர்மக்கள், உறவுகள் அதைப்பேசுமே, இதைப்பேசுமே என்று நினைத்து மனித உயிருக்கு, உடலுக்கு, மனதுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபடாமல், உயிருக்கு ஆபத்தான வகையில் நேர்த்திக்கடன் அது இது என்று இறங்கி எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment