Pages

Share

Sunday 22 October 2017

மெர்சல் படத்தின் கதை பழைய படங்களை நினைவுபடுத்துகிறதா

மெர்சல் படத்தின் கதை விஜயேந்திர பிரசாத் (இயக்குனர் ராஜமௌலியின் அப்பா) என்று சொன்னார்களே... ஆனா பழைய படங்களை நினைவுபடுத்துகிறதே... நீ என்ன சொல்ல வர்ற? இந்த கதை காப்பியா, இல்லையா என்று கேட்பது புரிகிறது.

படம் பார்க்குறவங்களுக்கு நான் சொல்றது சின்ன விஷயம்தான்.

பம்மல் கே.சம்மந்தம் படத்துல கமல் அடிக்கடி சொல்ற டயலாக்: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

இந்த வசனத்தை ரசிகர்களை நோக்கி சொல்லவேண்டும் என்றால் படம் எடுப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.

இயக்குனர் விக்ரமன் "நான் பேச நினைப்பதெல்லாம்" அப்படின்னு ஒரு புத்தகத்துல, ரசிகன் ஒருபடத்தை முழுசா பார்த்துட்டு வந்து, ஆயிரம் குறை சொல்லலாம். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சியிலேயே நெளியக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். இதை மனதில் கொண்டால் நல்லது.

எப்படி கதை எழுதுவது என்ற கேள்வி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விடை முழுவதுமாக கண்டறியாமலேயே இருக்க சாத்தியம் இருப்பதாகத்தான் தெரிகிறது.
****************


கே டிவி, சமூக வலைதளங்களைப் பார்த்தே படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை அட்லீ விதைத்திருக்கிறார் என்று முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். இது மாதிரி சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில், எல்லா எழுத்தாளர்களுமே ஒரே கதையத்தான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். உடனே, நான் எழுதியிருக்கும் பெரும்பாலான கதைகளை மனதில் ஓட்டிப்பார்த்தேன். அட... ஆமா, நாம கூட பெரும்பாலான கதைகளில் ஒரே கருவைத்தான் அடிப்படையா வெச்சிருக்கோம்னு தோணுச்சு.

ஏன் இப்படி எழுதிகிட்டு இருக்கோம்னு யோசிச்சா இந்த ஒரு கருவை வெச்சு ஒரு கதையிலயே முழுசா எல்லாத்தையும் சொல்ல முடியாது. இன்னும் ஆயிரம் கோணங்களில் ஐயாயிரம் சிறுகதைகள் கூட எழுத முடியும் என்று என்னையறியாமல் என் ஆழ்மனது நம்பிக்கொண்டிருப்பது புரிந்தது.

எழுத்து துறையில் ஜாம்பவான்கள் பலரும் கூட இந்த மன எண்ணத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுஜாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா எழுதிய ஆரியபட்டா என்ற நாவலைப் படித்தேன். நூலின் முன்னுரையில், தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலை திரைக்கதையாக மாற்றி கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்து வெளிவந்ததாம். தமிழில் எழுதிய கதையும் கல்கி வார இதழில் 1998ல் தொடர்கதையாக வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

நல்ல திறமைசாலியான விஞ்ஞானி பல வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பாராட்டைக்கூட அடுத்தவர் தட்டிக்கொண்டு சென்று விடுவதால் கோபம் எல்லை மீறிப்போய் நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாத கும்பலுக்கு விலைபோய் விடுகிறார். உண்மை தெரிந்ததும் விஞ்ஞானியின் மனைவியே நாட்டைக்காப்பாற்ற வேண்டி கணவனை சுட்டுக்கொன்று விடுகிறார்.

இந்த ஒன் லைனை படிப்பவர்களுக்கு சிவாஜிகணேசன் நடித்த அந்த நாள் படமே நினைவுக்கு வரலாம். அந்த படமே ரோஷமான் என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்வார்கள்.

ஆரியபட்டா நாவல் திருமகள் நிலையம் 2000ல் நூலாக வெளியிட்டு 2013ல் நாலாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 150 பக்கம். சுமார் 130 பக்கங்களுக்கு பிறகுதான் கொலை செய்தவர் விஞ்ஞானியின் மனைவிதான் என்ற உண்மை வாசகர்களுக்கு புரியவந்தது. இன்னும் சிலருக்கு, கொலை நடந்த நேரத்தில் அவரது மனைவி வெளியூரில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே அவர்தான் கொலையாளி என்று யூகித்திருப்பார்கள். நான் கொஞ்சம் லேட்.

(சர்க்கரை)ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதான் சர்க்கரை என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் உள்ள படைப்புகள் இணைய உதவியினால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விடுவதால் காப்பி, தழுவல் எல்லாம் முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு விடுகின்றன.

சினிமா ரசிகர்கள் எல்லாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் பார்த்த சில படங்களை வைத்து என்னுடைய பார்வையை சொல்கிறேன்.

80கள் முதல் வெளிவந்த ரஜினிகாந்த் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... பணக்கார நண்பனால் அவமானப்படுத்தப்படுவார். அல்லது அங்கே வேலைக்காரனாக இருப்பார். கடைசியில் பார்த்தால் அந்த சொத்து முழுவதற்கும் அவர்தான் சொந்தக்காரனாக இருப்பார்.

விஜயகாந்த் படங்களை எடுத்துக்கொண்டால் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் அவரது கதாபாத்திரங்களின் முக்கிய வேலையாக இருக்கும்.

இயக்குனர்களை எடுத்துக்கொண்டாலும் இப்படி நிறைய சொல்லலாம். விக்ரமனை எடுத்துக்கொண்டால் ரொம்ப நல்லவங்க, குடும்பம், நட்புக்காக நம்ப முடியாத அளவுக்கு தியாகம் செய்யுவாங்க.

ஆர்.கே.செல்வமணியை எடுத்துக்கிட்டா அவ்வப்போது நாட்டை உலுக்கிய செய்திகள்தான் அவர் படங்களுக்கு ஒன் லைன் ஆக இருக்கும். (புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், குற்றப்பத்திரிக்கை இன்னும் பல.)

பொதுவா ஹீரோ சாதாரண ஆளா இருந்து மன பலம், உடல் பலத்தால் மட்டுமே சர்வ சக்தி படைச்ச வில்லனை எதிர்க்குற மாதிரி படம் எடுத்துகிட்டிருந்தாங்க. ரஜினியின் பல படங்களில் கூட இதுதான் கதையா இருக்கும். ஆனா விஷாலை எடுத்துக்குங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் அவருக்கு என்ன பிரியமோ தெரியல. செல்லமே படத்துல இன்கம்டாக்ஸ் ஆபீசரா (அதாவது கதா நாயகனுக்கு வலுவான பின்புலம் இருப்பதாக) வருவார். சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லன் இவரை விட பலம் குறைஞ்சவனாவே இருப்பாங்க.

சுந்தர்.சி படத்தை எடுத்துக்கிட்டா எல்லா படங்களிலும் உருட்டுக்கட்டையால் ஒருத்தர் மண்டையில இன்னொருத்தர் 'டொம் டொம்' என்று அடிக்கும் காட்சிகள் கன்ஃபர்ம்.

இப்படி எந்த படைப்பாளியை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு அடிப்படை விஷயம் அவருடைய எல்லா படைப்புகளிலும் தொடருவதை காணலாம்.

பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அப்படின்னு இயக்குனர் பேர் வரும்போது, புத்தகத்துல எழுதுனா அது கதை. படமா எடுத்தா திரைக்கதைன்னு நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப நினைச்சுக்குவேன்.

ஒரே கதையை எப்படி சொல்றோம்னுங்குற திறமையினால பல விதமா சுவாரஸ்யமா சொல்ல முடியும். அதுதான் திரைக்கதை அமைக்கும் விதம்.

இசையைப்பொறுத்தவரை ச ரி க ம ப த நி அப்படின்னு ஏழு ஸ்வரம்தான். அதை எப்படி பயன்படுத்துறோம்னுங்குறதை பொறுத்துதான் இசை ரசிகனை கவரும்னு சொல்லுவாங்க.

கதைகளும் அப்படித்தான். கதைகளின் மொத்த வகையே சில பிரிவுகள்தான். திரைக்கதை அமைக்கும் சாமர்த்தியத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று உலகம் முழுவதும் நம்புகிறார்கள்.

இப்போது ரசிகர்கள் என்பவர்கள் இயக்குனர், ஹீரோ, கதாசிரியர்களை விட அதிகமா படிக்கிறாங்க, உலகப்படம் பார்க்குறாங்கன்னு உண்மை புரிந்தவர்கள் படம் பார்க்கும்போது ரசிகனுக்கு போரடிக்குற காட்சிகளை வெச்சு, இந்த சீன் 1936லயே வந்துடுச்சுன்னு ஸ்டேட்டஸ் போட வைக்க மாட்டாங்க. படம் எடுப்பவர்கள் அதிகமாகவே மாத்தி யோசிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.

No comments:

Post a Comment