Pages

Share

Monday 16 October 2017

தீப ஒளி

தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்க சாலையின் இரு புறமும் குடிசைப் பகுதிகள். செங்கல்வர், மண்வர், கீற்றுத்தடுப்பு, ஏன் சுவரே இல்லாமல் கூரை மட்டும் உள்ள வீடுகளும் (?) உண்டு. இந்தியாவின் சமத்துவத்தை இதில் அறிந்து கொள்ளலாம்.



 மறுநாள் தீபாவளி. பலருடைய வீடுகளில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டதற்கு அடையாளமாக பட்டாசு ஒலிகள் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இருந்த நேரத்தில் திருமலை வீதியில் மண்வர், மண்தரையால் ஆன ஒரு வீட்டில் இருட்டும் நேரத்தில் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. உழைத்த களைப்பு நீங்க வேண்டும் என்று குடிபானம் அருந்தி வந்த முனியப்பன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அந்த வீட்டையே கலவரம் நடந்த கடைவீதியாக்கிவிட்டுப் போயிருந்தான்.
மயக்கம் தெளிந்த வளர்மதி மெள்ள கண்களைத் திறந்தாள்.

உடலில் எந்த பாகமும் மிச்சம் இல்லாமல் வலித்துக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். தரை முழுவதும் சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடக்க, பேராசிரியர் வீட்டில் இருந்து எடுத்து வந்த குழம்பு தரை முழுவதும் கொட்டி நாற்று நடத் தயாராக இருக்கும் வயல்போல் ஆகியிருந்தது. தீபாவளிக்காக என்று அவர்கள் கொடுத்திருந்த ஆடைகளும், பலகாரங்களும் முனியப்பனின் வன்முறையில் தப்பவில்லை.
நெற்றியில் வலி மிக அதிகமாகவே இருக்க, இடது கைவிரல்களால் லேசாகத் தடவிப் பார்த்தாள். எலுமிச்சைப்பழத்தின் ஒரு பாதியைக் கவிழ்த்து வைத்தது போல் வீங்கியிருந்தது. அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து நிலைப்படியில் மோதியும் ஆத்திரம் அடங்காத முனியப்பன், கீழே தள்ளி கண்ட இடத்திலும் மிதித்துவிட்டு வெளியேறியது நினைவுக்கு வரவும் அவள் கண்கள் மீண்டும் கலங்கின.

எதிர்ப்புறம் சுவரோரமாக ஒண்டியிருந்த மகனைப் பார்த்தாள். நான்கு வயதிருக்கும். தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து அழுது அழுது ஓய்ந்து விட்டிருந்தான் அவன்.

வளர்மதிக்கு அடிவாங்கியதால் முக வீக்கம். மகன் செந்திலுக்கு அழுததால் முகமெல்லாம் வீக்கம்.

தன் விதியை எண்ணி நொந்துகொண்டு தரையைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி ஒழுங்குபடுத்தினாள்.

முனியப்பன் தினமும் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கி நூற்றுக்கணக்கில் சம்பாதித்தாலும், அவையெல்லாம் குடிப்பதற்கும், மூணு சீட்டு ஆட்டத்திற்கும் செலவு செய்யவே போதவில்லை என்று மிகவும் வருந்துவான். ஒரு சிறந்த இந்தியக் ‘குடி’ மகனின் கவலை வேறு எப்படி இருக்கும்?

ஒரு பேராசிரியரின் வீட்டில் வீட்டு வேலை செய்வதால் பட்டினி இல்லாமல் வயிறு தப்பிப் பிழைக்கிறது. பிள்ளை எந்தக் காலம் வளர்ந்து நம் கஷ்டத்தைத் தீர்க்கப் போகிறானோ என்று நொந்துபோய் இருந்தாள். மகன் செந்திலை ஏதாவது டீக்கடையில் கிளாஸ் கழுவ அனுப்பலாம் என்று கூட விசாரித்துப் பார்த்தாள். அதற்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளாவது போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

‘இப்போது வேறு குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குற்றம் என்ற சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளதாக நிறையப்பேர் பேசிக்கொள்கிறார்களே... நம் பிள்ளையை வேலைக்கு அனுப்பும்போதும் அந்தச் சட்டம் இருக்குமா?... நம் கஷ்டம் அரசாங்கத்துக்கு எங்கே தெரியப்போகுது?...’ என்றெல்லாம் வளர்மதி சிந்தனை செய்தாள்.

‘இதையெல்லாம் சட்டம் போட்டு எதுவுமே செய்ய முடியாதுடி... எத்தனை கடையை தினமும் கண்காணிப்பாங்க... ஏதாவது முட்டுச் சந்துல ஒரு கடை இருக்காதா? அதுல ஒரு வேலை உன் புள்ளைக்கு இல்லாமலா போயிடும்?...’ என்று சில மேதாவிகள் வளர்மதிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

கணவனின் கொடுமையைவிட வேறு ஒரு கவலையும் சேர்ந்து கொண்டு அவளை வாட்டியது.

தஞ்சாவூரின் திருமலை சாலை சில நேரங்களில் மட்டும் கனரகப் போக்குவரத்துக்கு பயன்பட்டுவந்தது. அதை நிரந்தரமாக பிரதான சாலையாக்கி ஒருவழிப்பாதையாக அறிவிக்கப் போவதாக செய்திகள் உலவுகின்றன.

அப்படிச் செய்தால் சாலையின் இருபுறமும் உள்ள குடிசை வீடுகள்தான் முதல்பலி. காரணம், மற்ற இடத்தில் உள்ள சாலையின் அகலம் இருபத்தைந்து அடிளுக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த குடிசைப்பகுதிகளில் எட்டு அடிக்கும் குறைவான அகலம்தான் இருந்தது. பிறகு இடிக்காமல் என்ன செய்வார்கள்.

அப்படி ஒரு நிலை வந்து நடுத்தெருவில் நின்றால் வேறு இடத்தில் வாடகை வீடு பார்த்து அதற்கும் பணம் சம்பாதிக்க முடியுமா?...

அதெல்லாம் கிடக்கட்டும். மறுநாள் தீபாவளி. ஆனால் காலையில் எப்போதும் போல் தெருக் குழாயில் குடிநீருக்காக மற்ற பெண்களுடனே மல்யுத்தம் அளவில் சண்டை போடவாவது உடம்புல தெம்பு இருக்குமா?... பாவி மனுஷன் இப்படியா அடிப்பான்... என்று கலங்கி நின்றாள்.
வளர்மதி அவ்வப்போது வேதனையை சொல்லி அழ திருமலை வீதி பிரதான சாலையுடன் இணையும் இடத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குதான் செல்வது வழக்கம். இப்போதும் அங்கேதான் கிளம்பினாள். பிள்ளையுடன் சென்ற அவள் கோயிலுக்கு அருகில் இருந்த கடையில் கற்பூரம் வாங்கிக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்தாள்.

அந்த ஆலயத்திற்கு இருபது நாட்களுக்கு முன்புதான் குடமுழுக்கு நடைபெற்றிருந்தது. அதன்பிறகு வளர்மதி இப்போதுதான் உள்ளே வருகிறாள். தரை முழுவதும் மார்பிள் கற்கள். சுவரிலும் ஐந்தடி உயரத்திற்கு சலவைக் கற்கள். புத்தம் புதிய வர்ணங்கள். அதன் மணம் இன்னும் வீசிக் கொண்டிருந்தது. சுவரெங்கும் நிறைய ஓவியங்கள்!
ஆலயம் கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது.

இன்று மாரியம்மன் எளிமையான ஒப்பனையில் இருந்தாள். குருக்கள் தீபாராதனை காட்டிவிட்டு வளர்மதி முன்னால் வந்து நின்றார்.
தட்டில் கற்பூரத்தை வைக்கப்போனாள்.

சூடம் ஏத்துறது இல்லம்மா... நெய்தீபம்தான்... தட்டுல சூடத்தை வெக்க வேணாம்மா...என்றார்.

இவள் தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு பிள்ளையின் கண்களுக்கும் ஒற்றினாள்.
விபூதியைக் கொடுத்துவிட்டு குருக்கள் உள்ளே சென்றார். இவள் பக்கத்தில் நின்ற பெண்ணிடம் தீப்பெட்டி வாங்கி கற்பூரத்தை ஏற்றினாள்.

அப்போது பிரகாரம் சுற்றி வந்த பெரியவர், ஏம்மா இப்பதான் புதுசா கல்லு போட்டுருக்காங்க... அதுல போய் சூடம் கொளுத்துற?... சுவாமி வாகனத்துக்குப் பக்கத்துல செங்கல் இருக்கே... அதுல ஏற்றி வெச்சா என்னம்மா?... இனிமே இந்த மாதிரி செய்யாதம்மா...என்றார்.

அணை உடைந்து நீர் வெளியேறுவதுபோன்ற வேகத்தில் கணவன் மீதிருந்த கோபத்தை அந்தப் பெரியவர் மேல் காட்டினாள்.

வளர்மதி, 'யோவ்... நான் சூடத்தை தரையிலதான கொளுத்துனேன். உன் தலையிலயா தீ வெச்சேன்... வீட்டுலதான் நிம்மதி இல்லை. இங்க வந்து பாரத்தை எறக்கி வெச்ட்டு போகலாம்னா முகம் தெரியாதவன்கிட்ட போயி பேச்வாங்க வேண்டியிருக்கு...என்று பொரிந்தாள்.

பெரியவர் திகைத்துப்போய் நிற்க, சத்தம் கேட்டு குருக்கள் வெளியே வந்தார்.
ஐயா... இதுங்களைத் திருத்தவே முடியாது. நீங்க ஏன் வாயைக் குடுத்துட்டு அசிங்கப்படுறீங்க... என்ற குருக்களின் குரலில் லேசான கோபம்.

கண்ணாடி மாதிரி இருந்த தரையைக் கறையாக்குனது நம்ம தப்புதான், அவர் பொறுமையாத்தான எடுத்துச் சொன்னாருன்னு கொஞ்சமாச்சும் புரியுதா பாருங்க... உங்க வயசைக் கூட மதிக்காம எடுத்தெறிஞ்சு பேது... செஞ்ச தப்பை உணராம இது இப்படி பேறதைப் பார்த்து வளர்ற இதோட பையன் நல்ல குணத்தோட நிச்சயமா வளர மாட்டான். யாரோட காலையாவது தெரியாம மிதிப்பான். அவர், ஏன் தம்பி பார்த்து போகக் கூடாதான்னு கேட்பார். உடனே இவன் யாரைப்பார்த்து என்னடா சொன்னேன்னு கேட்டு அவரை உதைப்பான்.

சமுதாயத்துல குற்றவாளிகள் அதிகமாகுறதுக்கு இந்த மாதிரி பெத்தவங்கதான் முக்கிய காரணம். நாம கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது? சேத்துல காலை வெச்சா நமக்குதான் அசிங்கம்...என்று குருக்கள் பேசி விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
இப்போது வளர்மதி மனதில் சாட்டையடி.

குருக்களும், பெரியவரும் சற்று நகர்ந்து கிணற்றடியில் போய் உட்கார்ந்தார்கள்.
அந்தப் பெரியவர், சாமி, நீங்க சொல்றதும் சரிதான். இந்த அம்மாவைச் சொல்லித் தப்பு இல்லை. அவங்க அம்மா செஞ்சது மாதிரியே இதுவும் செஞ்சிருக்கும்.
இதைப் பார்க்குற அந்தப் பையனும் நாளைக்கு இதே மாதிரி இன்னொரு கோயில்ல போய் செய்வான். இப்படியே போனா எந்தப் புள்ளியில அவங்க திருந்துவாங்க?...என்று கவலையுடன் சொன்னார்.

அதற்கு குருக்கள், ஐயா... இந்தப் பொம்பளைக்கு தான் செஞ்சது தப்புன்னு தெரியலை. நீங்களும் தன்மையா எடுத்துச் சொன்னீங்க. அதைக் காது கொடுத்து கேட்டிருந்தா அந்தப் புள்ளைக்கும் நல்ல புத்தி வந்திருக்கும். நாளைக்கு அவனுக்கு ஒரு புள்ளை பிறந்தாலும் இந்த மாதிரி நல்ல பழக்கத்தை சொல்லி வளர்ப்பான். ம்...என்ன செய்ய?... இதெல்லாம் நம்ம சமுதாயத்தோட சாபக்கேடு...என்று பெருமூச்சு விட்டார்.

அப்போது அங்கே வந்த பேராசிரியரின் மனைவி லீலாவதி குருக்களிடம் என்ன ஐயா...ஏதோ பலமான விவாதம் போலிருக்கே...என்றாள். 

அவர்கள் நடந்ததை சொன்னார்கள்.

வளர்மதியைப் பார்த்த லீலாவதிக்கு வியப்பு. எங்க வீட்டுல வேலை செய்யுற பொண்ணுதான். நான் எடுத்து சொல்றேன். என்று குருக்களிடம் சொன்ன லீலாவதி, வளர்மதியை தனியே அழைத்துச் சென்றாள்.

ஏய்..வளர்மதி... நான் வந்தப்ப சரியா கவனிக்கலை. என்ன முகமெல்லாம்?... புருஷனோட திருவிளையாடலா. சரி இப்படி வா... என்று ஒரு ஓரமாக உட்கார்ந்த லீலாவதி, எதிரில் வளர்மதியையும் அமரச் செய்தாள்.

உன்னோட குணம் இது இல்லையே... என்ன பிரச்சனைன்னு சொல்லு. என்னால எதுவும் உதவ முடியுமான்னு பார்க்குறேன்... என்று மனம் நிறைய அக்கறையுடன் லீலாவதியிடமிருந்து வந்த கேள்வியே வளர்மதியின் மனபாரத்தைப் பாதியாகக் குறைத்துவிட்டது.

லேசான விம்பலுடன் கணவனின் மோசமான நடத்தையையும் கந்து வட்டிக்காரன் நெருக்குதலையும் கூறியவள், கண்களை துடைத்துக் கொண்டு, இன்னும் ரெண்டே வருஷம்... அப்புறம் என் புள்ளையை ஒரு வேலைக்கு அனுப்பிட்டா தீர்ந்தது கவலை... என்றாள்.

லீலாவதிக்கு பகீர் என்றது.

உங்க ரெண்டு பேர் மேலயுமே வழக்குப் போட்டு உள்ள தள்ளணும்.

என்னம்மா இப்படி சொல்றீங்க? 

ஆமாம்...குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழே உன் புருஷன்மேல ஒரு வழக்கு. குழந்தையை வேலைக்கு அனுப்புனா அதுக்கு உங்க ரெண்டுபேர் மேலயும் ஒரு வழக்கு போடணும்.

உடனே வளர்மதியின் கண்கள் கலங்கி விட்டன.

உங்களுக்கு என்னம்மா கவலை? ஐயா ஆயிரக்கணக்குல சம்பாதிக்கிறாரு.
எங்களை மாதிரி ஒரு வேளை சோறு கூட நிச்சயம் இல்லாம தினம் தினம் செத்துப்பிழைக்கிறவங்க போராட்டமெல்லாம் உங்களுக்கு எங்க புரியப்போகுது?

ஏய்... இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண்ணைக் கசக்குற?
உன் புருஷன் பொறுப்பில்லாம இருக்குறதால, கந்துவட்டிப் பிரச்சனை, அன்றாட வாழ்க்கையை கவனிக்கத் தடுமாறி பிள்ளைக்கு எப்படா ஏழு வயசு ஆகும்... வேலைக்கு அனுப்பலாம்னு யோசிக்குற? உன் புருஷனும் இப்படி சின்ன வயலேயே கூலி வேலைக்குப் போனதால எல்லாக் கெட்டப் பழக்கமும் வந்து உன்னையைக் கொடுமைப் படுத்துறாரு. 

இப்ப உன் புள்ளையை ஏழு வயசுக்கே வேலை செய்து சம்பாதிக்க அனுப்புனா கையில நிறைய காசு புழங்கும். பிற்காலத்துல உன்னை மாதிரி ஒரு பெண்ணை அவனும் கொடுமைப் படுத்துவான். படிச்சவங்க எல்லாரும் ரொம்ப சரியா இருக்காங்கன்னு சொல்ல வரலை. நீ ஓரளவு படிச்சிருந்தாலே வெளியில வேலை செஞ்சு, உன் புருஷனை எதிரிபார்க்காமலேயே உன் புள்ளையை வளர்த்து ஆளாக்க முடியும்.

சுத்தமா படிக்காததால இப்ப வீட்டு வேலை செஞ்சு, வாழ்க்கைத்தேவையை பூர்த்தி பண்ணிக்க முடியாம தடுமாறிகிட்டே இருக்க. என்று லீலாவதி சொல்லவும் வளர்மதிக்கு பளிச்சென விளங்கியது.

தன்னுடைய துன்பத்திற்கு முக்கிய காரணம் கல்வியறிவின்மை. ஆனால் அதைப் பற்றி இப்போது யோசித்து என்ன செய்வது? 

அம்மா...இந்தக் கஷ்டத்துலேர்ந்து நான் மீளவே முடியாதா? 

இப்போது லீலாவதி முகத்தில் உற்சாகம்.

அப்படிக் கேளு. என் தம்பி வேலை செய்யுற கம்பெனியில கேண்டீன் இருக்கு. அதுல சமைக்க கைப் பக்குவம் உள்ள ஆள் தேவைன்னு சொல்லிகிட்டு இருந்தான். நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.

கந்துவட்டிக்காரன்கிட்ட எவ்வளவு குடுக்கணுமோ, அதை நான் தர்றேன். நீ மாசா மாசம் அசலை மட்டும் கொஞ்சமா திருப்பிக்கொடு. உன் புள்ளையை மட்டும் எக்காரணம் கொண்டும் வேலைக்கு அனுப்பிடாத. குறிப்பிட்ட வகுப்பு வரை இலவசக் கல்வி கிடைக்கும். அதுக்கு மேல எதுவும் உதவி தேவைன்னா நாங்க இருக்கோம்.

ஏன், கேண்டீன் வருமானத்துல நீயே உன் செலவுல புள்ளையைப் படிக்க வைக்கலாம்.
ஒருத்தர்கிட்ட யாசகம் கேட்க கூச்சப்படலாம்...ஆனா பிழைக்க வழி கேட்கவோ, படிக்க வழி கேட்கவோ கவலையே படக்கூடாது...இதை மட்டும் மனசுல வெச்க்க...என்று லீலாவதி முடித்தபோது குருக்கள், தீபாராதனைத் தட்டை எடுத்து வந்தார்.

அந்த தீப ஒளியிலே வளர்மதிக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயமில்லை என்ற நம்பிக்கை தெரிந்தது.
தஞ்சை பதிப்பு மாலைமுரசு தீபாவளிமலர் 2017ல் பிரசுரமானது.

No comments:

Post a Comment