Pages

Share

Sunday 15 October 2017

தமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி? பகுதி 2

முதலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் ஆதிக்கம் பெருகாத காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் பார்ப்பது தொடர்பான எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பார்ப்போம்.


1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் பக்கவட்டுக்கதவுகளுக்கு முன்னால் இருக்கும் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். அப்போது ஸ்கிரினில் மாட்டியிருக்கும் வளையம் கதவுகளுக்கு மேலே இருக்கும் இரும்பு குழாயில் உரசும் சத்தம் கூட கேட்பதற்கு ஆசையாக இருக்கும்.
 வெண்திரைக்கு முன்னால் உள்ள வெல்வெட் ஸ்கிரீன் 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள். 

தியேட்டர் வாசலிலும் அந்த சிற்பம் உண்டு. சுருங்கிக்கொண்டே வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்திரையில் சிலைடு பிம்பம் விழுவதை பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது கேட்ட அந்த மியூசிக்கை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை அவ்வை சண்முகி படத்தில் வேலை.... பாடல் தொடங்குவதற்கு முன்பு லீட் மியூசிக் ஒன்று வரும். அதுதான் அந்த பழைய மியூசிக்கோடு ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன்.

சரியாக அந்த கேசட்டை போட்டுவிட்டு நாலைந்து நொடிகள் கழித்து ஒரு குறிப்பிட்ட சவுண்ட் வரும்போது 15 கலர் பல்ப்புகள் எரிய வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்பும். 3 ஆம் வகுப்பு டிக்கெட்டுக்கு (திரைக்கு அருகில்) போனால் லேட்டாகத்தான் உள்ளே விடுவார்கள் என்று இதற்காகவே கூடுதல் கட்டண டிக்கெட் எடுத்துப்போக வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடித்திருக்கிறேன். 

இதெல்லாம் 1994 வரைதான். அந்த ஆண்டு நம்மவர் படம் தீபாவளி ரிலீஸ். அப்போதுதான் ஸ்கிரீன் பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களை மாற்றினார்கள். அப்போதெல்லாம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்கள் கூட தினசரி 5 காட்சிகள் திரையிடப்படும். அந்த நேரங்களில் காலைக்காட்சியில் மேலே நிறுத்தப்படும் ஸ்கிரீன் இரவுக்காட்சி வரை  இறங்காது. அதனால் இந்த மியூசிக் கேட்க வாய்ப்பில்லை. அது தவிர தினமும் காலைக்காட்சி முடிந்து மதியக் காட்சி 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் திரையிடப்பட்டுவிடும் என்பதால் அப்போதும் வெல்வெட் ஸ்கிரீன் மியூசிக் கேட்க வேலையில்லை. இதனால் மதியக் காட்சி போக நான் விரும்புவதில்லை.
பல நேரங்களில் மோட்டார் ரிப்பேர் என்று ஸ்கிரீனை மேலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள். தியேட்டருக்குள் நுழையும் நான், அடப்பாவிகளா... இதை எல்லாம் முன்னாலேயே சொல்ல மாட்டீங்கிளா என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்ததுண்டு. அப்படி நான் 1994 தீபாவளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு காளை என்ற படத்துக்கு போனபோது காதலன் படத்தில் முக்காபலா, புன்னகை மன்னன் படத்தில் காலம் காலமாக நாங்கள்... மற்றும் சத்யா படத்தின் வளையலோசை கலகலவென்று பாடல்களை ஃபுல் சவுண்ட் வைத்து பாடவிட்டு அப்போதே ஸ்கிரீனை ஏற்றி விடுவார்கள். பிறகு நியூஸ் ரீல் ஓடும்.
***********
சவுண்ட் சிஸ்டத்தில் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும் இருந்து வந்தது. ஆனால்  வெளிச்சத்துக்கு  கார்பன் போய் பவர்புல் மின்விளக்குகள் வந்தாலும் சினிமா கண்டறியப்பட்ட காலம் முதல் பிலிம் சுருளை புரொக்டரில் பொருத்தி திரையிடும் தொழில் நுட்பம் சுமார் 80 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் 2000க்கு பிறகுதான் அதிகமாக டிஜிட்டலில் திரையிடும் வசதிகள் பெருக ஆரம்பித்தன.
இப்போதெல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் தொல்லைக்காட்சிகளில் ஏதாவது ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே குறைவாக கிடைக்கும்போதுதான் போற்றப்படும். மிதமிஞ்சினால் அலட்சியம்தான் மிஞ்சும் என்பதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இப்போதும் திரையரங்குகளில் அதிகமாக கூடுபவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான்.
சினிமாக்கள் தொலைக்காட்சிகளில் சிரிப்பாய் சிரிக்கத்தொடங்கும் முன்பு எல்லாம் தீபாவளி விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள 5 திரையரங்குகளிலும் வெளியான படங்களைப் பார்த்துவிட்டு வந்து ஒரு மாணவன் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புவான். அவன் பெயர் செந்தில் முருகன். 2 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை நாங்கள் ஒன்றாக படித்தோம். (1988-92) நன்றாக படம் வரையும் அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அதே போல் இன்னும் சிலர் குறைந்தது 5ல் 3 படங்களையாவது பார்த்துவிட்டுதான் வருவார்கள்.  என்னால் ஒரு படம் கூட பார்க்க முடியவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டு மனம் புழுங்கியதுண்டு.
1995ல் சோழாவில் முத்து படம் ரிலீஸ். நான்கு நாட்கள் கழித்துதான் போனேன். காலையில் எட்டே முக்காலுக்கு சென்றுவிட்டேன். 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் 9 மணிக்கு சரியாக படத்தை திரையிட்டுவிட்டார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக கதவைத்திறந்து கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். எதுவரைக்கும் என்றால், ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்து படம் போட்டு ரொம்ப நேரமாச்சா தம்பி என்று கேட்டார். நான் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்பே இடைவேளை என்று லைட்டைப்போட்டார்கள். ஆனால் அரங்கம் நிறைந்து இருந்தது. அந்த தியேட்டரில் டிக்கட் கொடுப்பவர்கள், கிழிப்பவர்கள், வாட்ச்மேன், போஸ்டர் ஒட்டுபவர், ஆப்ரேட்டர்கள் என்று சுமார் 20 பேர் வேலைபார்த்து வந்தார்கள். கேண்டீன், சைக்கிள் ஸ்டாண்ட் ஊழியர்கள் தனி. இப்போதும் உயிரைக்கையில் பிடித்திருக்கும் சில சிறு நகர தியேட்டர்களில் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர்களே மற்ற வேலைகளை பார்த்து விடுவதாகவும், துப்புரவுப்பணி, போஸ்டர் ஒட்டுவது, கேண்டீன், சைக்கிள் ஸ்டாண்ட் ஆகியவற்றுக்கு மட்டும் ஆட்கள் வைத்து நடத்திக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். இது உண்மையாகவும் இருக்கக்கூடும்.
**********
இணையத்தில் தேடியபோது திருவாரூர் சோழா மற்றும் தைலம்மை தியேட்டரின் ஒளிப்படம் கிடைத்தது. சோழாவில் 2003 பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக (நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது) விக்ரம்-ஜோதிகா நடித்த "தூள்'' படம் ரிலீசானது. அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது. பிளக்ஸ் கலாச்சாரம் சின்ன ஊர்களுக்கு வரும் முன்பு பெரிய படங்கள் ரிலீசாகும்போது மட்டும்தான் இப்படி கையால் வரைந்த பேனர்கள் தான் தியேட்டர்களில் வைக்கப்படும். கிட்டத்தட்ட அந்த நடிகர் மாதிரியே வரைஞ்சிருக்காங்களே என்பது அந்த வயது மற்றும் அந்த காலகட்ட ஆச்சர்யம்.

அப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் நடித்தபடம் அல்லது பொங்கல், தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களுக்கு மட்டுமே துணி பேனர்கள் வரும். தியேட்டர் வாசலில் அதைப் பார்க்கும் போதே என்னால் ஆச்சர்யம் தாங்க முடியாது. உருவம் அப்படியே அசலைப் போல் போஸ்டரில் இருந்தாலும் துணி பேனரில் ரஜினி மாதிரியோ, மீனா மாதிரியோ இருக்கும் உருவத்தை பார்த்து இதை வரைய எவ்வளவு கஷ்டப்படுறாங்களா என்று நினைப்பேன். மேலும் திருச்சி ஏரியாவில் 10 தியேட்டரில் படம் ரிலீசாகிறதே.
அத்தனை ஊருக்கும் பேனர் வரைஞ்சு அனுப்புறதுன்னா எத்தனை நாளைக்கு முன்னாலயே வரைய ஆரம்பிப்பாங்க என்றெல்லாம் என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு. அந்த பேனர்களில் போஸ்டருடன் ஒட்டும் தியேட்டர்பெயர் கொண்ட ஸ்லிப்புகளை ஒட்டி வைப்பார்கள். தீபாவளி, பொங்கல் சமயங்களில் 30 இன்ச் உயரம், 40 இன்ச் அகலத்தில் ஒரு கலர் அல்லது இரண்டு கலர்களில் அந்த ஊர் தியேட்டர் பெயரையும், படத்தின் பெயரையும் படத்தில் நடித்திருக்கும் ஹீரோ, ஹீரோயின்கள், ஏவிஎம் போன்ற பெரிய நிறுவன தயாரிப்பு என்றால் தயாரிப்பு நிறுவன பெயருடன் லித்தோ போஸ்டர்கள் திடீரென முளைக்கும்.

ஆனால் இப்போது ஒரே நாள் இரவில் 100 அல்லது 200 அடி நீளமுள்ள பிளக்ஸ் போர்டுகளைக்கூட மெஷின்கள் அலட்சியமாக பிரிண்ட் செய்து தள்ளி விடுகின்றன. அதுதான் படத்தின் ஸ்டில்லுடனே தியேட்டை பெயருடன் பொங்கல், தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று பிளக்ஸ் போர்டு வைக்க முடிகிறது. டெக்னாலஜி வளர்ச்சி நல்ல விஷயம்தான். ஆனால் துணி பேனரில் வரைந்து கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் கம்ப்யூட்டர் டிசைன் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைந்திருப்பார்கள்?
விவசாயம், ஓவியம் என்று பல துறைகளிலும் தொழில்நுட்பப் புரட்சி வந்து பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. உயர்த்தியும் விட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு பேரை முகவரி இல்லாமல் ஆக்கியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

காலத்தின் வேகத்தில் பலர் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேகமான இந்த உலகத்தில் தடுக்கி விழுந்தவனை தூக்க ஒருவன் முயற்சித்தால் அவனையும் சேர்த்து சமாதியாக்கிவிட்டு ஓடத்தான் பின்னால் வருபவர்கள் முயற்சிக்கிறார்கள். அதையும் சமாளித்து கீழே விழுந்தவனையும் காப்பாற்றி, தானும் சேர்ந்து ஓடுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
*******
திருவாரூரில் 1998 காலகட்டம் வரை 5 தியேட்டர்கள் இருந்தன. அனைத்திலும் புதுப்படங்கள் வெளியாகும். இப்போது போல் ஒரே படம் மூவாயிரம், நாலாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் காலம் அல்ல. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படம் 1997 பிப்ரவரியில் ரிலீசானது. ஆனால் திருவாரூர் சோழாவில் தமிழ் வருடப்பிறப்புக்குதான் வெளியானது. திருச்சி ஏரியாவில் ஆறு பிரிண்ட் மட்டுமே போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். திருச்சி, தஞ்சாவூர், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை - இது மட்டும்தான் என்று நினைக்கிறேன். 

அவ்வளவு ஏன்? 1998 அல்லது 1999 என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு பத்து நாட்கள் இருந்ததால் பாட்ஷா படத்தை நடேஷ் தியேட்டரில் திரையிட்டார்கள். அப்போதும் நல்ல கூட்டம். தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்தால் ஏழெட்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிவிடும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு எந்த தியேட்டருக்கும் கவலை இருக்காது. வரிசையாக படங்கள் கிடைக்கும்.
அதேபோல் 1996 தேர்தல் சமயத்தில் நான் 9ஆம் வகுப்பு விடுமுறையில் பணியாற்றிய தியேட்டரில் நாயகன் படம் திரையிட்டோம். மூன்று நாட்கள் பெரிய வசூல்.
*****
வருடம் 1996.

காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை. 

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.
*********
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள்.

ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள்,  உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள்.  ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். உதவியாளர்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார். 

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள். 

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.


உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.
படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை. 
சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்  காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு.  

இப்போது இதைப் பற்றி பேசினால் நாலு வயதுக்குழந்தை கூட இவனுக்கு என்னவோ ஆச்சு என்று பரிதாபப் பார்வை பார்த்து விட்டு சென்று விடும்.  


இதையெல்லாம் எதற்காக இங்கே பேசுகிறோம் என்றால்,
.... தொடரும்...


No comments:

Post a Comment